திண்டுக்கல் அருகே சிறுமலையில் மர்மபொருள் வெடித்து உயிரிழந்தது, தோட்டத்தை குத்தகைக்கு எடுக்க வந்த கேரளாவைச் சேர்ந்த விவசாயி என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் 17-வது கொண்டை ஊசி வளைவு அருகே நேற்று முன்தினம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக, வனத்துறையினர் மற்றும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. திண்டுக்கல் தாலுகா போலீஸார் அங்கு சென்ற போது, அந்த உடல் அருகே டெட்டனேட்டர்கள் மற்றும் வயர்கள் கிடந்தன. வெடிகுண்டு நிபுணர்கள், க்யூ பிரிவு போலீஸார் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப் பட்டு சோதனை நடந்தது.
அப்போது, உடல் அருகே கிடந்த மர்ம பொருள் திடீரென வெடித்ததில் 2 போலீஸார், ஒரு வனத்துறையினருக்கு காயம் ஏற்பட்டது. இறந்தவரின் பாக்கெட்டில் இருந்த செல்போனை கைப்பற்றி நடத்திய விசாரணையில், அவர் கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த சாபு ஜான் (58) என்பது தெரியவந்தது. அவர் எதற்காக சிறுமலை பகுதிக்கு டெட்டனேட்டரை கொண்டு வந்தார். நக்ஸல் அமைப்பைச் சேர்ந்தவரா என போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், இறந்தவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமலையில் மிளகு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். பின்னர் சொந்த ஊருக்குச் சென்றவர், சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தோட்டத்தை குத்தகைக்கு எடுப்பதற்காக சிறுமலைக்கு வந்துள்ளார்.
» விசிக புல்லட் பேரணியில் பங்கேற்ற 170 பேர் மீது வழக்கு!
» பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட தொழிலதிபர் மகன் பவானிசாகர் அருகே மீட்பு!
கோட்டயத்தில் உள்ள தோட்டத்து கிணற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால், பாறைகளை வெடி வைத்து தகர்க்க முடிவு செய்துள்ளார். அதற்காக, திண்டுக்கல்லில் பேட்டரி, வயர்களை வாங்கி வந்து சம்பவ இடத்தில் வைத்து தயார் செய்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த பொருள் வெடித்ததில் உயரிழந்ததும், அவர் நக்ஸல் அமைப்பைச் சேர்ந்தவர் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது என, போலீஸார் தெரிவித்தனர்.