பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட தொழிலதிபர் மகன் பவானிசாகர் அருகே மீட்பு!

By KU BUREAU

பெங்களூருவில் இருந்து கடத்திவரப்பட்ட தொழிலதிபர் மகனை, பவானி சாகர் அருகே போலீஸார் மீட்டனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஹெபால், ஆர்.டி.நகர், சோழ நாயகன ஹல்லி, கெம்பன்னா லேஅவுட், 4-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் தொழிலதிபர் முத்து. இவரது மகன் இஸ்ரவேல் (21), சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இந்நிலையில் நேற்று பெங்களூரு, எல்லங்கா வீரசாகரில் உள்ள பாண்டே மாறம்மாள் கோயில் அருகே இஸ்ரவேல் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 4 பேர் இஸ்ரவேலிடம் சாதுர்யமாக பேசி கடத்திச் சென்றனர்.

இந்த கார் ஈரோடு மாவட்டம் பவானிசாகரை அடுத்த பெரிய கள்ளிப்பட்டி சோதனைச் சாவடி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு வந்தது. அப்போது அங்கு பவானிசாகர் காவல் நிலைய காவலர் அரிஷ்குமார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரைக் கண்ட இஸ்ரவேல் தன்னை காப்பாற்றும்படி அலறியுள்ளார்.

சந்தேகமடைந்த காவலர் அரிஷ்குமார் காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். எனினும், அவர்கள் காரை எடுக்க முயன்றுள்ளனர். ஆனால், இஸ்ரவேல் கையைப் பிடித்து வெளியே தள்ளினார் அரிஷ்குமார்.

உடனடியாக காரில் இருந்த கும்பல் தப்பிச் சென்றது. இதையடுத்து இஸ்ரவேலை பவானிசாகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், ‘தான் சட்டக்கல்லூரி மாணவர் எனவும், தங்களது வீட்டை வாடகைக்கு கேட்பது போல் தன்னை கடத்தினர். மேலும், என்னை விடுவிக்க எனது தந்தையிடம் ரூ.2 கோடி கேட்கப் போவதாகவும் கூறினர்’ என தெரிவித்தார். இதுதொடர்பாக பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே துரிதமாக செயல்பட்டு தொழிலதிபர் மகனை மீட்ட காவலர் அரிஷ்குமாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE