சென்னையில் ஒரே நாளில் 3 இடங்களில் வழிப்பறி - மூவர் கைது

By KU BUREAU

சென்னையில் ஒரே நாளில் 3 இடங்களில் நடைபெற்ற வெவ்வேறு வழிப்பறி சம்பவங்களில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

கோயம்பேட்டை சேர்ந்தவர் பானு (21). இவர் பகுதி நேரமாக திருமங்கலத்தில் உள்ள தனியார் கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து திருமங்கலம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், பானுவின் செல்போனை பறித்துச் சென்றுவிட்டார். இதுகுறித்து திருமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், வேப்பேரி டவுட்டன் மேம்பாலத்தின் கீழே பிளாட்பாரத்தில் வசித்து வந்த சிவா (30) என்பவர் நேற்று முன்தினம் புரசைவாக்கம் பண்டாரம் தெருவில் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், சிவாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.500-ஐ பறித்துச் சென்றுவிட்டார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய வேப்பேரி போலீஸார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நிமல்ராஜ் (23) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தனியார் கால் டாக்சி நிறுவனத்தில் கார் ஓட்டுநராக வேலை செய்து வரும் அண்ணா நகர் வெல்கம் காலனியைச் சேர்ந்த உமாபதி (35), பெரியமேடு அல்லிக்குளம் லிங்க் ரோட்டில் சவாரிக்காக காரில் உட்கார்ந்திருந்தபோது, அங்கு வந்த 2 பேர், உமாபதியை தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.2,700 ரொக்கம், செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில், சூளையைச் சேர்ந்த ரிச்சேஸ் (25), பெரியமேட்டைச் சேர்ந்த சங்கர் (26) ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE