எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தை, வாரந்தோறும் சனிக்கிழமை கூடும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகளும், வியாபாரிகளும் ஆயிரக்கணக்கில் இந்த சந்தைக்கு வருகை தருவது வழக்கம். சந்தை சனிக்கிழமை கூடும் என்றாலும் வெள்ளிக்கிழமை மாலை முதலே விவசாயிகளும், வியாபாரிகளும் வந்து விடுவதால் சந்தை பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி பொன் வேலன் என்பவரிடம், 3 பேர் கூட்டாக வந்து, 2 வெள்ளாடுகளை வாங்கியுள்ளனர். அவர்கள் கொடுத்த 500 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் புத்தம் புதிதாக இருந்தன. ரூ.13 ஆயிரத்துக்கு விலை போக வேண்டிய ஆடுகளை, ரூ. 19 ஆயிரத்துக்கு எந்தவித பேரமும் பேசாமல் அவர்கள் வாங்கியது, பொன் வேலனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சந்தை குத்தகைதாரரிடம் பணத்தைக் கொடுத்து பரிசோதித்துள்ளார். உடனடியாக, எட்டயபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் விரைந்து சென்று கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த விருதுநகர் மாவட்டம் கோட்டைபட்டியைச் சேர்ந்த மாரிமுத்து (35) என்பவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவருடன் வந்தவர்கள், தாங்கள் வந்த காரில் தப்பினர். அந்த கும்பலை எட்டயபுரம் தனிப்படை போலீஸார் விரட்டிச் சென்றனர். சாத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளம் முனியசாமி என்ற முனியன் (48), கோட்டைப்பட்டி சக்கையன் என்ற சந்திரன் (27), காளிமுத்து (30), அழகர்சாமி (45), சாத்தூர் சூரங்குடியைச் சேர்ந்த சுப்புராஜ் (51) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
» லால்குடி அருகே இருசக்கர வாகனம் மீது மரம் முறிந்து விழுந்து சென்னை தம்பதி மரணம்!
» சென்னையில் ரயில் பயணிகளிடம் செல்போன் பறிப்பு - இருவர் கைது
அவர்களிடமிருந்து ரூ.54 ஆயிரம் மதிப்பிலான ரூ.500 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் பட்டாசு ஆலைகளில் வேலை செய்து வருவதும், மும்பையைச் சேர்ந்த ஒருவர் மூலம் கள்ள நோட்டுகளை வாங்கி வந்து, ஆடு, மாட்டுச் சந்தைகளில் புழக்கத்தில் விடுவதும் தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.