லால்குடி அருகே இருசக்கர வாகனம் மீது மரம் முறிந்து விழுந்து சென்னை தம்பதி மரணம்!

By எம்.கே.விஜயகோபால்

திருச்சி: லால்குடி அருகே சாலையோரத்தில் இருந்த நாவல் மரம் முறிந்து இருசக்கர வாகனம் மீது விழுந்ததில், சென்னையைச் சேர்ந்த தம்பதி பலத்த காயமடைந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் (40). இவரது மனைவி புனிதா (37). இவர்கள் இருவரும் திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளனர். இந்நிலையில், சனிக்கிழமை அங்கிருந்து ஸ்ரீரங்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

மேலவாளாடி அருகே சென்றபோது, சாலையோரம் இருந்த ஒரு நாவல் மரம் முறிந்து, இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த கொள்ளிடம் போலீஸார், இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையே, விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அளித்த தகவலின்பேரில், லால்குடி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE