பந்தலூரில் வேட்டையாட முயன்ற இருவர் கைது - வாகனம் பறிமுதல்

By ஆர்.டி.சிவசங்கர்

பந்தலூர்: பந்தலூர் பகுதியில் கேரளாவிலிருந்து வந்த வன விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய வாகனம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் வனக்கோட்டத்தில் கேரளாவிலிருந்து வரும் நபர்கள் வன விலங்குகள் வேட்டையில் ஈடுபடுவது அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் வேட்டையில் ஈடுபட்ட ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். அந்த சம்பவத்தில் துப்பாக்கி வழங்கிய நபர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு பின்னர் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கூடலூர் வனகோட்டம் பந்தலூர் வனச்சரகம் தேவாலா பிரிவு நாடுகாணி காவல் பகுதிக்கு உட்பட்ட கேரளா தமிழ்நாடு மாநில எல்லையான கீழ்நாடுகாணி பகுதியில் வனச்சரகர் சஞ்ஜிவீ தலைமையில் வனத்துறை ஊழியர்கள் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த கேரளா மாநில பதிவு எண் கொண்ட வாகனத்தை சோதனை செய்தனர். அதில் வனவிலங்கு வேட்டையில் ஈடுபடுவதற்காக, அவர்கள் கொண்டு வந்த கத்திகள், நாட்டு வெடிகுண்டு, டார்ச் லைட்கள் மற்றும் தோட்டாக்கள் இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக அந்த வாகனகம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், மற்றோரு வாகனம் வனத்துறையினரை கண்டவுடன் தப்பி விட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தில் வந்த கேரள மாநிலம் வழிக்கடவு பகுதியைச் சேர்ந்த ரெஜி(46) மற்றும் உடன் வந்த ரகமத் அலி(37) ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

வேட்டையாட முயற்சித்த இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் இன்று பந்தலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காப்பு காவலில் வைக்கப்பட்டனர். தப்பிய வாகனம் மற்றும் அதில் பயணித்த நபர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE