சென்னை: சேலத்தில் ஸ்கேன் சென்டர் நடத்தி கருவில் உள்ள சிசுவின் பாலினம் தெரிவித்த அரசு பெண் மருத்துவர் உள்பட ஏழு கிராம செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்தும், ஒப்பந்த செவிலியரை பணி நீக்கம் செய்ய மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சேலம் வீராணம் அருகே கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் பகுதியில் பசுபதி ஸ்கேன் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்கேன் சென்டரில் கருவில் உள்ள சிசுவின் பாலினம் குறித்த தகவலை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து வந்துள்ளனர். இது சம்பந்தமாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இடைத்தரகர்கள் மூலமாக கர்ப்பிணிகளை அழைத்து வந்து, இந்த ஸ்கேன் சென்டரில் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிந்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வாழப்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ரமேஷ்குமார் தலைமையிலான குழுவினர் பசுபதி ஸ்கேன் சென்டரில் இரண்டு தினங்களுக்குமுன்பு ஆய்வு செய்தனர்.
அப்போது, ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய பெண்மருத்துவர் முத்தமிழ், தொடாவூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கலைமணி இருவரும் சேர்ந்து கருவில் உள்ள சிசுவின் பாலினம் குறித்த தகவல்களை தெரிவித்து வந்துள்ளனர். மேலும், பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து செவிலியர்கள், இந்த ஸ்கேன் சென்டருக்கு கர்ப்பிணிகளை அனுப்பி கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை தெரிந்து கொள்ள அனுப்பியுள்ளது மருத்துவ குழுவினர் விசாரணையில் தெரியவந்ததை யடுத்து, ஸ்கேன் சென்டரில் இருந்த ஸ்கேன் இயந்திரங்களை பறிமுதல் செய்து, சீல் வைத்தனர்.
இதுசம்பந்தமாக வாழப்பாடி மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார் வீராணம் காவல் நிலையத்தில், அரசு விதிமுறைகளை மீறி கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை தெரிவித்த அரசு மருத்துவர் உள்பட எட்டு செவிலியர்கள் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வீராணம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கருவில் உள்ள சிசுவின் பாலினம் தெரிவித்த அரசு மருத்துவர் முத்தமிழ், தொடவூரை சேர்ந்த செவிலியர் கலைமணி, ஆத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களாக பணியாற்றிய வனிதா, வசந்தி, மங்கை ராணி, கலை செல்வி, மகேஸ்வரி ஆகிய ஏழு பரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் உத்தரவிட்டுள்ளார். மேலும், சேலத்தை சேர்ந்த ஒப்பந்த செவிலியர் அம்பிகாவை பணி நீக்கம் செய்திட சென்னை சுகதாார துறை இயக்குனர் அலுவலகத்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.
» 1913ல் ஆரம்பித்த கல்விப்பணி: திருவாரூர் கோவிந்தகுடி அரசு தொடக்க பள்ளியில் இன்று 113-ம் ஆண்டு விழா!
இதுகுறித்து மாவட்ட சுகதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறும் போது, ''சேலத்தில் வீராணம் பகுதியில் பசுபதி ஸ்கேன் சென்டரில் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை தெரிவித்த அரசு பெண் மருத்துவர் முத்தமிழ் உள்பட ஏழு கிராம செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சேலத்தை சேர்ந்த ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியரை பணி நீக்கம் செய்ய சுகாதார துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளேன். இதன் அடிப்படையில் அவரை பணி நீக்கம் செய்யப்படுவார். சேலத்தில் நேற்று காலை மூன்று தனியார் மருத்துவமனைகளில் சென்னையில் இருந்து வந்துள்ள மருத்துவ பணிகள் இயக்குனரக அதிகாரிகள் குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மேலும் தனியார் மருத்துவமனைகளில் குழுவினர் ஆய்வு செய்து, அவர்கள் அளிக்கம் அறிக்கையின் படி அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.