வேலூர்: தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர்கள் 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
வேலூர் வேலப்பாடி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (55). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், தனது இருசக்கர வாகனத்தில் வேலூர் பில்டர்பெட் சாலையில் இருந்து கமிஷரி பஜார் வழியாக நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள், வெங்கடேசனின் வாகனத்தின் மீது மோதுவது போல் சென்றுள்ளனர். இதனை வெங்கடேசன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த 3 இளைஞர்களும், வெங்கடேசனுடன் தகராறில் ஈடுபட்டனர்.
திடீரென அவர்கள் வெங்கடசனை சரமாரியாக தாக்கி கீழே தள்ளியுள்ளனர். இதில், வெங்கடேசன் மயங்கி கீழே விழுந்துள்ளார். வெங்கடேசனை தாக்கிய இளைஞர்கள் தப்பிச் சென்றனர். அவ் வழியாகச் சென்றவர்கள் மயங்கி விழுந்த வெங்கடேசனை மீட்டு வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர். தப்பியவர்கள் வேலூர் மக்கன் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (20), தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி தெருவைச் சேர்ந்த அஜய் (20), புதுத் தெருவைச் சேர்ந்த ஜவகர் (26) என தெரியவந்தது. வெங்கடேசன் கொலை வழக்கு தொடர்பாக 3 பேரையும் காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
» சென்னை மாநகராட்சி பொறியாளர் பணிக்கு போலி நியமன ஆணை: சிவகங்கையில் ரூ.25 லட்சம் மோசடி
» அதிகாலையிலேயே மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு: மதுரையில் மனைவியை குத்திக்கொன்ற தொழிலாளி