திருச்சி அதிர்ச்சி: போக்சோ வழக்குகளில் காவலர், ஆசிரியர் உட்பட 5 பேர் கைது

By KU BUREAU

திருச்சி: திருச்சியில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த காவலர், அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர், கரூர் மாவட்டத்தில் மனநலம் பாதித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 3 பேர் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த பிருத்திகைவாசன் என்பவர் கடந்தாண்டு ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 4 நாட்களுக்கு முன் திருச்சி அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வந்த இளம் ராஜா (36) என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது பிருத்திகை வாசனுக்கு சிகிச்சை அளிக்க வந்த பயிற்சி செவிலியர் மாணவி ஒருவருக்கு இளம்ராஜா பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதுகுறித்து மாணவி அளித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து இளம்ராஜாவை நேற்று கைது செய்தனர். இதையடுத்து இளம்ராஜாவை பணியிடை நீக்கம் செய்து பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. ஆதர்ஸ் பசேரா உத்தரவிட்டார்.

அரியலூர் மாவட்டத்தில்... அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆண்டிமடம் அருகேயுள்ள கவரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்(57) தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், அப்பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் 11 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸார், தமிழாசிரியர் சுரேஷை போக்சோ பிரிவில் நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

கரூர் மாவட்டத்தில்... கரூர் மாவட்டம் கடவூரை அடுத்த குப்பாண்டியூரை சேர்ந்தவர்கள் கிருஷ்ண பெருமாள் (23), அபிஷேக் (18), சுந்தரம் (49). இவர்கள் 3 பேரும் 10-ம் வகுப்பு படிக்கும் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இதில் அந்த சிறுமி தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், குளித்தலை அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து 3 கிருஷ்ணபெருமாள் உட்பட 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE