புதுச்சேரி: கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக ரூ.2.60 கோடி மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுவையில் மூலக்குளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அசோகன் (66) உள்ளிட்ட 10 பேரிடம் ஆன்லைன் வழியாக மர்மகும்பல் ரூ.2.60 கோடி மோசடி செய்ததாக புதுவை சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தியதில், கோவையை மையமாக வைத்து பல மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோரிடம் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் எனக்கூறி ஒரு கும்பல் ரூ.50 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக தமிழகத்தில் விழுப்புரம், திருப்பூர், கோவையில் அக்கும்பல் மீது வழக்கு பதிவு செய்திருப்பதும் கண்டறியப்பட்டது.
இக்கும்பல் தான் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களிடம் ரூ.2.60 கோடி மோசடி செய்ததும் தெரியவந்தது. இக்கும்பலைச் சேர்ந்த இம்ரான் பாஷா என்பவரை ஏற்கெனவே ராய்ப்பூர் போலீஸார் கைது செய்திருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த மோசடி தொடர்பாக கோவையைச் சேர்ந்த ஹித்திஷ் குமார் (36), அரவிந்த் குமார் (40) ஆகியோரை புதுவை க்ரைம் போலீஸார் நேற்று முன்தினம் கோவையில் கைது செய்து புதுவைக்கு அழைத்து வந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிரிப்டோ கரன்சி, உடனடி வேலை என பல வகையில் மோசடி செய்ததும் தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக பாபு (எ) சையது உஸ்மான், இம்ரான் பாஷா, தாமோதரன், நூர் முகமது, சந்தானம், நத்தியப்பன், கணேசன், ஆலியா ரேஷ்மா பர்வீன், அன்சார் மற்றும் லுக்மான் ஆகியோரை சைபர் க்ரைம் போலீஸார் தேடி வருகின்றனர்.
» முற்றிய குடும்ப தகராறு: நீலகிரியில் கணவரை எரித்து கொன்ற மனைவி கைது
» வங்கி கணக்கில் தவறுதலாக அனுப்பிய ரூ.20.95 லட்சம் பணத்தை மோசடி செய்தவர்கள் மீது வழக்கு!