பங்குச்சந்தை ஆசை காட்டி ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ.68.86 லட்சம் மோசடி: வேலூர் அதிர்ச்சி

By KU BUREAU

வேலூர்: பங்குச் சந்தை முதலீட்டு ஆசை காட்டி கைபேசி செயலி வழியாக ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ.68.86 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த 67 வயதான ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு பங்குச் சந்தை முதலீடு குறித்த விளம்பரம் வந்துள்ளது. அதை நம்பி தொடர்பு கொண்டபோது ‘ஆதித்ய பிர்லா இன்வெஸ்ட்மென்ட் க்ளப்’ என்ற வாட்ஸ்-அப் குழுவில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் இணைக்கப்பட்டார். அந்த குழுவில் இருந்தவர்கள் முதலீடு தொடர்பாக கிடைத்த லாபம் குறித்த விவரங்களை அவ்வப்போது பதிவேற்றம் செய்துவந்தனர்.

அதை உண்மை என நம்பிய அவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முடிவு செய்தார். அதன்படி, அந்த முதலீட்டு குழுவினர் கூறிய அறிவுரைகளின் படி ABMLPR என்ற கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அதில், தனது விவரங்களை பதிவு செய்ததுடன் செயலியில் குறிப்பிட்டிருந்த வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் சுமார் ரூ.68 லட்சத்து 86 ஆயிரம் பணத்தை முதலீடு செய்துள்ளார்.

அந்த முதலீட்டுக்கு அதிக லாபம் ஈட்டிய நிலையில் அந்த தொகையை ஓய்வு பெற்ற அரசு ஊழியர் எடுக்க முயன்றுள்ளார். ஆனால், அந்த பணத்தை எடுக்க முடியாத நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வேலூர் மாவட்ட சைபர் குற்றப் பிரிவில் புகார் அளித்தார். அதன் பேரில் ஆய்வாளர் ரஜினி குமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE