திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே அரசு பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை போச்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மலை ரெட்டியூரில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் கடந்த ஓராண்டாக ஆங்கில ஆசிரியராக தற்காலிக பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். பள்ளியில் கடந்த 21-ம் தேதி கணினி தேர்வு நடைபெற்றுள்ளது. அப்போது, அந்த பள்ளியில் படிக்கும் 6 மாணவிகளிடம், ஆசிரியர் பிரபு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக 1098 என்ற எண்ணுக்கு சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில், திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மத்தேயு மற்றும் சாதனா ஆகியோர் பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை செய்தனர். அதில், மாணவிகள் புகார் உறுதி செய்யப்பட்டது. பின்னர், வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மத்தேயு நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து போச்சோ மற்றும் பாலியல் சீண்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் பிரபுவை கைது செய்தனர்.
» சகோதரியை கேலி செய்ததால் ஆத்திரம்: கடலூர் இளைஞர்கள் இருவர் கொன்று புதைக்கப்பட்ட கொடூரம்
» திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை: கணவன், மனைவிக்கு 20 ஆண்டு சிறை