தென்காசி: திருவேங்கடம் அருகே உள்ள சத்திரம்கொண்டான் கிராமத்தில் இன்னாசி ராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தார்.
இயந்திரம் மூலம் மக்காச்சோளம் அறுவடைப் பணி நேற்று நடைபெற்றது. அப்போது, அவரது நிலத்தில் மனித எலும்புக்கூடு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து, திருவேங்கடம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து சென்று, எலும்புக்கூடை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சடலமாக கிடந்தவர் யார் என்பது குறித்தும், அவரது மரணத்துக்கான காரணம் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.