சகோதரியை கேலி செய்ததால் ஆத்திரம்: கடலூர் இளைஞர்கள் இருவர் கொன்று புதைக்கப்பட்ட கொடூரம்

By KU BUREAU

கடலூர்: சகோதரியை கிண்டல் செய்ததால் கடலூர் இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட்டு, நெய்வேலி ஊமங்கலம் பகுதியில் புதைக்கப்பட்டனர். போலீஸார் உடல்களை தோண்டி எடுத்து, அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் அருகே உள்ள எம்.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நகராஜ் மகன் அப்பு ராஜ் (22). அதே கிராமத்தைச் சேர்ந்த பால குரு மகன் சரண் ராஜ் (22). இருவரும் நண்பர்கள். கடந்த மாதம் இருவரும் மாயமானார்கள். இது குறித்து திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர்.

தனிப்படையினர் நடத்திய விசாரணையில், கடந்த மாதம் 22ம் தேதி அப்புராஜ், சரண்ராஜ் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த குவாரி லாரி ஓட்டுநர் முருகன் பால் ராஜ் (23) மற்றும் அவரது நண்பர்கள் நெய்வேலி ஊமங்கலம் அருகே உள்ள என்எல்சி சுரங்க மண்மேடு பகுதியில் மது அருந்த சென்றனர். போதை ஏறியதும் அப்பு ராஜ், பால் ராஜ் சகோதரியை பற்றி கிண்டல் செய்து தரக்குறைவாக கூறியுள்ளார்.

அதில் ஆத்திரமடைந்த பால்ராஜ், அப்பு ராஜை ஆபாசமாக திட்டி இரும்பு ராடால் பலமாக தாக்கியுள்ளார். இதை தடுக்க முயன்ற சரண் ராஜையும் பலமாக தாக்கியுள்ளார். இதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து இருவரின் உடல்களையும் பால்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து அதே பகுதியில் இந்த மண்மேட்டில் இருந்த குழியில் போட்டு புதைத்துள்ளனர். இது வெளியே தெரியக் கூடாது என்பதற்காக, அப்பகுதியில் ஒரு லோடு லாரி மண்ணை கொண்டு வந்து கொட்டியுள்ளனர்.

விசாரணையில் இது தெரியவந்தது. போலீஸார் பால் ராஜை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, விருத்தாசலம் வட்டாட்சியர் உதயக்குமார் முன்னிலையில் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு, அங்கேயே மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது..

இச்சம்பவத்தில் பால் ராஜூக்கு கொலைக்கு உதவியவர்களை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். பால் ராஜ் என்எல்சி சுரங்க மண் மேட்டின் அருகாமையில் குவாரி நடத்தி வரும் திமுக ஒன்றிய துணை செயலாளர் கணேசன் என்பவரிடம் லாரி டிரைவராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE