மதுபோதையில் மருத்துவரிடம் தகராறில் ஈடுபட்ட காவலர் கைது: வேலூர் மத்திய சிறையில் அடைப்பு

By KU BUREAU

வேலூர்: குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மதுபோதையில் மருத்துவரிடம் தகராறில் ஈடுபட்ட இரண்டாம் நிலை காவலர் அருண் கண்மணி என்பவர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி தனியார் ஷூ கம்பெனியின் வாகனம் நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது. பி.கே.புரம் அருகே சென்றபோது அந்த வேனை இருச க்கர வாகன ஓட்டி ஒருவர் வழிமடக்கி தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அந்த வாகனம் கே.வி.குப்பம் காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. அப்போது, தகராறில் ஈடுபட்ட நபர் தன்னை காவலர் எனக்கூறி வேன் ஓட்டுநரிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக கே.வி.குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்செல்வன் நடத்திய விசாரணையில், ரகளையில் ஈடுபட்டவர் காட்பாடி விருதம்பட்டு காவல் நிலைய காவலர் அருண் கண்மணி (40) என்பது தெரியவந்தது. மதுபோதையில் இருந்த அவரை மருத்துவப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கே.வி.குப்பம் காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு அழைத்துச் சென்றனர். அங்கும் ரகளையில் ஈடுபட்ட காவலர் அருண் கண்மணி, அங்கிருந்த கதவின் கண்ணாடியை நொறுக்கியதுடன், பணியில் இருந்த மருத்துவரையும் மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பாக குடியாத்தம் நகர காவல் நிலையம் மற்றும் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் இருவேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அருண் கண்மணி வேலூர் மத்திய சிறையில் நேற்று இரவு அடைக்கப் பட்டார். மேலும், அவரை சஸ்பெண்ட் செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். அருண் கண்மணி ஏற்கெனவே குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் பணியாற்றியபோது பானிபூரி கடைக்காரரை தாக்கிய வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE