பதிவு பத்திரத்தை வழங்க ரூ.70 ஆயிரம் லஞ்சம்: திருமங்கலம் சார்-பதிவாளர், பத்திர எழுத்தர் கைது

By KU BUREAU

மதுரை: தொலைந்த மூலப் பத்திரத்துக்கான போலீஸ் சான்றிதழின் உண்மைத் தன்மை அறிந்து பதிவு பத்திரத்தை வழங்க ரூ.70 ஆயிரம் லஞ்சம் பெற்ற மதுரை திருமங்கலம் சார்-பதிவாளர், பத்திர எழுத்தரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் கடந்த மாதம் 24ம் தேதி 3 ஏக்கர் 18 சென்ட் நிலத்தை பதிவு செய்வதற்கு,திருமங்கலம் பத்திரப் பதிவு அலுவலகத்துக்குச் சென்றார். அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். 3 ஏக்கருக்கான மூலப் பத்திரம் தொலைந்ததால், புகார் அடிப்படையில் தேனி காவல் நிலையத்தில் இருந்து பெற்ற சான்றிதழ் ஒன்றையும் வழங்கினார்.

அப்போது, பணியில் இருந்த சார்-பதிவாளர் (பொறுப்பு) பாண்டிய ராஜன் (47), மூலப்பத்திரம் தொலைந்துபோனதற்காக வாங்கிய காவல் துறை சான்றிதழை சரிபார்த்த பிறகே பதிவு பத்திரம் வழங்கப்படும். தாமதமின்றி உடனே பத்திரம் கிடைக்க வேண்டும் என்றால் ரூ.1 லட்சம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

இந்நிலையில், செந்தில் குமார் வழங்கிய காவல் நிலையச் சான்றிதழின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய சார்-பதிவாளர் பாண்டியராஜன், தேனி காவல் நிலையத்துக்கு கடிதம் எழுதி உறுதி செய்தார். இது குறித்து தகவல் அறிந்த செந்தில் குமார் தனது பதிவுப் பத்திரத்தை வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனாலும், ரூ.70 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பத்திரம் வழங்கப்படும் என சார்-பதிவாளர் கூறியுள்ளார்.

இதனால், செந்தில் குமார் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனையின் பேரில், செந்தில் குமார் ரசாயனம் தடவிய ரூ.70 ஆயிரம் நோட்டுகளை சார்-பதிவாளர் பாண்டிய ராஜனிடம் நேற்று கொடுக்கச் சென்றார். ஆனால், சார்-பதிவாளர் அந்த பணத்தை வாங்க மறுத்து, பத்திர எழுத்தரான திருமங்கலத்தைச் சேர்ந்த பால மணிகண்டன் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து, ஏடிஎம் இயந்திரம் மூலம் பால மணிகண்டன் வங்கிக் கணக்கில் லஞ்சப் பணம் டெபாசிட் செய்யப்பட்டது. அப்போது, அருகில் மறைந்திருந்த கூடுதல் டிஎஸ்பி சத்ய சீலன் தலைமையில், ஆய்வாளர்கள் ரமேஷ் பிரபு, சூரிய கலா, பாரதி பிரியா உள்ளிட்டோர் சார்-பதிவாளர் பாண்டிய ராஜன், பால மணிகண்டன் (42) ஆகியோரை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE