கோவை: ரத்தினபுரியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், அதே பகுதியில் சொந்தமாக குடியிருப்புக் கட்டிடம் கட்டினார்.இதற்காக 6 மின் இணைப்புகள் கேட்டு, ரத்தினபுரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
நடைமுறைகள் முடிந்த பின்னர், அவருக்கு 6 மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர், மின் இணைப்புகள் வழங்கியதற்காக ரூ.30 ஆயிரம் தருமாறு ரத்தினபுரி மின்வாரிய அலுவலக ஊழியர்களான போர்மேன் ஹாரூன் (56), கேங்மேன் உதயகுமார் ஆகியோர் விண்ணப்பதாரர் ராஜ்குமாரை வலியுறுத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு பின்னர், ரூ.18 ஆயிரம் கண்டிப்பாக தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். பணம் கொடுக்க விருப்பம் இல்லாத ராஜ்குமார், கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விண்ணப்பதாரர் ராஜ்குமாரிடம் போலீஸார் கொடுத்தனுப்பினர். அந்த பணத்தை மின் வாரிய அலுவலகம் அருகே வைத்து நேற்று உதயகுமார், ஹாரூன் ஆகியோர் வாங்கியபோது, மறைந்திருந்து கண்காணித்த கூடுதல் எஸ்.பி திவ்யா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார், இருவரையும் கைது செய்தனர்.