வீரவநல்லூர் அருகே 5 பேர் கொலை வழக்கில் 10 பேருக்கு 4 ஆயுள் தண்டனை!

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே முன்விரோதத்தில் 5 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு நான்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீரவநல்லூர் அருகே அத்தாளநல்லூரை சேர்ந்த விவசாயி சின்னத்துரை (38) என்பவர் குடும்பத்தினருக்கும், உப்புவாணிமுத்தூரை சேர்ந்த சிவனுபாண்டி குடும்பத்தினருக்கும் இடையே அங்குள்ள சுடலைமாடன் சுவாமி கோயிலில் சாமி ஆடுவது தொடர்பாக 2008-ம் ஆண்டில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் 2009-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி சின்னத்துரை, தான் வளர்த்து வந்த 4 ஆடுகள் காணாமல்போனது தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

4 நாட்களுக்குப்பின் சின்னத்துரை வயலில் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் சின்னத்துரை, அவரது சகோதரி பாண்டியம்மாள் (46), அவரது மகன் மணிகண்டன் (25), கருங்காடு நடுத்தெரு கி. முத்துப்பாண்டி (30) ஆகியோர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். எதிர்தரப்பில் குணசேகரன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வீரவநல்லூர் போலீஸார் தனித்தனியே இரு வழக்குகள் பதிவு செய்தனர்.

சின்னத்துரை, பாண்டியம்மாள் உள்ளிட்ட 4 பேர் பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சொர்ணபாண்டி (60), பொன்னத்துரை (51), முத்துப்பாண்டி (63), சிவனுபாண்டி (73), கருத்தபாண்டி (47), ஆறுமுக நயினார் (41), சுப்பிரமணியன் (36), முருகன் (41), மகாராஜன் (42), மற்றொரு கருத்தபாண்டி (50), இசக்கி (71), ஆதிமூலகிருஷ்ணன் (39), மாயாண்டி (84) ஆகிய 13 பேரை கைது செய்தனர். இதுபோல் குணசேகரன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அர்ஜூனன் (51) என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்து சின்னத்துரை உட்பட 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சொர்ணபாண்டி, பொன்னத்துரை, முத்துப்பாண்டி, கருத்தபாண்டி, ஆறுமுக நயினார், சுப்பிரமணியன், முருகன், மகாராஜன், மற்றொரு கருத்தபாண்டி, ஆதிமூலகிருஷ்ணன், மாயாண்டி ஆகிய 10 பேருக்கும் நான்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். நான்கு ஆயுள் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சிவனுபாண்டி, இசக்கி ஆகியோர் இறந்துவிட்டனர்.

இதனிடையே குணசேகரன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அர்ஜுனனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE