ரூ.1,000 வரவு வைத்து ரூ.22 லட்சம் மோசடி: எலெட்ரிக்கல் பொருட்கள் வாங்கி விற்றால் கூடுதல் லாபம் என முறைகேடு

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: எலெக்ட்ரிக்கல் பொருட்களை வாங்கி விற்றால் கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறி, திருப்பூர் இளம்பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக திருப்பூர் சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

திருப்பூரை சேர்ந்த 27 வயது இளம்பெண்ணுக்கு வாட்ஸ் அப் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் எலெக்ட்ரிக்கல் பொருட்களை வாங்கி விற்பனை செய்தால், கூடுதல் லாபம் கிடைக்கும் என தெரிவித்தார். இதனை நம்பிய இளம்பெண், பொருட்கள் விற்பனை செய்ய ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அந்த நபர் கொடுத்த லிங்க் மூலம், டெலிகிராம் கணக்குக்குள் நுழைந்தார். விற்பனை தொடர்பாக வர்த்தக கணக்கை துவங்கினார்.

முதல் கட்டமாக ரூ.1000-ம் லாபம் கிடைத்தது. தொடர்ந்து பல கட்டங்களாக பார்த்தபோது, கணக்கில் ரூ.1 லட்சம் இருந்தது. ஆனால், பணத்தை எடுக்க முயன்றபோது கிரெடிட் மதிப்பெண் குறைவாக இருந்ததால் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

இதனை நம்பிய அப்பெண் பல்வேறு தவணையாக ரூ.22 லட்சம் முதலீடு செய்தார். ஆனால் அப்போதும் தொடர்ந்து பணத்தை எடுக்க முடியவில்லை. இதையடுத்து இறுதியாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் திருப்பூர் மாநகர சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE