தமிழக நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் நடப்பது எப்படி? - ஏஐடியுசி விவரிப்பு

By KU BUREAU

கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல்களை தடுக்க தமிழக அரசு மேலாண் இயக்குநரகத்திலிருந்து நடவடிக்கையை தொடங்க வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியுசி தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார், தமிழக முதல்வர், நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது:

நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு பெறப்படுவதாக புகார் தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுப்பதாக மேலாண் இயக்குநரால் அறிவிக்கப்பட்டு, அதுகுறித்த புகார்களை தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், புகார்களை பெற்று, சிலரை வேலையை விட்டு நீக்குவதும், சிலரை காவல்துறை மூலம் கைது செய்வது என்பது இதற்கு தீர்வாகாது. ஊழல் முறைகேடுகளை களைய வேண்டுமானால் அரசு, நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநரகத்திலிருந்து நடவடிக்கையை தொடங்க வேண்டும். நிர்வாகம் தனது பொறுப்பை சரியாக செய்யாததுடன், ஊழல் நடைபெறுவதை தடுக்காமல் பொறுப்பற்ற முறையில் பார்வையாளராக செயல்படுவதும் ஊழலுக்கு முக்கிய காரணமாகும்.

அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு ரூ.40 வரை கூடுதல் தொகை பெறப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட 48 மணிநேரத்துக்குள் நெல்லை இயக்கம் செய்ய வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுவதில்லை. இதனால், கொள்முதல் நிலையங்களில் பல நாட்கள் இருப்பிருந்து நெல் அனுப்பப்படும்போது பெருமளவுக்கு எடை குறைவு ஏற்படுகிறது. ஒரு கிலோ எடை குறைந்தாலும் கொள்முதல் பணியாளர்கள் அதற்கான இழப்புத் தொகையை செலுத்த வேண்டும்.

டெல்டா மாவட்டம் உள்ளிட்ட அனைத்து மண்டல மேலாளர்களால் விளக்கம் கேட்காமல்ஸ விசாரணை ஏதும் செய்யாமல், தவறிழைத்தது நிரூபிக்கப்படாமல், செயல்முறை ஆணை ஏதும் பிறப்பிக்கப்படாமல் கொள்முதல் நிலைய பணியாளர்களிடம் பல கோடி ரூபாய் வசூலிக்கப் பட்டுள்ளது. இது ஊழலுக்கு அடிப்படை காரணம். இந்த பல கோடி ரூபாயை விவசாயிகளிடம் கையூட்டு பெறுதல் மூலம் ஈடுகட்ட முடியும் என்ற சூழல் உருவாக்கப்படுகிறது.

கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் இயக்கம் செய்கின்ற முழு அதிகாரம் லாரி ஓட்டுநர்களிடமே உள்ளது. ரூ.1,500 முதல் ரூ.4,000 வரை மாமூல் கொடுத்தால் தான் இயக்கம் நடைபெறுகிறது. கொள்முதல் அலுவலர்கள் மூட்டை ஒன்றுக்கு ரூ.2 வீதம் வாரந்தோறும் வசூலித்து, அதை உயர் அதிகாரிகள் வரை பங்கிட்டு கொள்கின்றனர்.

ஆய்வு செய்ய வரும் பெரும்பாலான குழுக்கள் வரும்போதே ரூ.5,000 கொடுக்க வேண்டும். இல்லை என்றால், வேலை பறிப்பு என்பதாகவோ அல்லது பெருந்தொகை ரெக்கவரி போடப்படும் நிலையோ தான் செயல்பாட்டில் உள்ளது. எனவே, ஊழல் முறைகேடுகளை களைய மேலாண் இயக்குநரகத்திலிருந்து நடவடிக்கையை தொடங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE