திருநெல்வேலி: செல்போன் அழைப்பு மூலமாக சூப்பர் மார்க்கெட், ஹோட்டல், எலக்ட்ரிகல்ஸ் மற்றும் இதர டோர் டெலிவரி செய்யும் அனைத்து கடை வியாபாரிகளை குறிவைத்து புதிதாக நூதன பண மோசடி நடைபெறுவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்று திருநெல்வேலி போலீஸார் கூறியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தற்போது செல்போன் அழைப்பு மூலமாக சூப்பர் மார்க்கெட், ஹோட்டல், எலக்ட்ரிகல்ஸ் மற்றும் இதர டோர் டெலிவரி செய்யும் அனைத்து கடை வியாபாரிகளை குறிவைத்து FAKE TRANSACTION FRAUD என்று புதிதாக நூதன பண மோசடி நடைபெறுவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் டோர் டெலிவரி செய்யும் அனைத்து கடைகளின் விளம்பரங்களில் இருந்தும் இணையதளத்தில் இருந்தும் செல்போன் எண்களை எடுத்து மோசடி செய்யும் நபர்கள், அறிமுகமில்லாத எண்ணிலிருந்து உங்களை தொடர்பு கொண்டு பொருட்கள் ஆர்டர் செய்ய வேண்டுவதாக கூறி, உதாரணமாக ரூ.1,932 -மதிப்பிற்கு என குறைந்த தொகையில் பொருட்கள் ஆர்டர் செய்துவிட்டு அதற்கான தொகையை போன் பே செயலி மூலமாக அனுப்பி விடுவதாக கூறிவிட்டு ஆர்டர் செய்த பொருளை பிறகு நேரில் வந்து பெற்றுக் கொள்வதாக கூறுவர்.
சிறிது நேரத்தில் மீண்டும் உங்களை தொடர்பு கொண்டு தான் ஆர்டர் செய்த பொருள்களுக்கு ரூ.1,932/- பதிலாக ரூ.19,322/- என பணத்தை மாற்றி அனுப்பி விட்டதாக கூறி போன் பே செயலியில் பணம் அனுப்பியது போல போலியான ஸ்கிரீன் ஷாட்டை வாட்ஸ் அப் மூலமாக அனுப்பிவிட்டு பொருட்கள் ஆர்டர் செய்த தொகையை தவிர்த்து மீதி தொகையை அனுப்புமாறு கூறி நம்ப வைத்து பண மோசடி செய்து ஏமாற்றி வருகின்றனர்.
» நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல்; விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறது அரசு - சீமான் கண்டனம்
» ஈஷாவில் பிப்.26-ல் மகா சிவராத்திரி பெருவிழா: அமித் ஷா, டி.கே.சிவகுமார் பங்கேற்பு
எனவே அறிமுகம் இல்லாத எண்களிலிருந்து உங்களது நிறுவனம் அல்லது கடைகளில் செல்போன் மூலமாக டெலிவரி ஆர்டர் செய்யும் நபர்களின் அழைப்புகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு பணம் அனுப்பியதற்கான ஸ்கிரீன் ஷாட்களை நம்பாமல் உங்களது வங்கிக் கணக்கில் பணம் வந்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இவ்வாறு செல்போன் மூலம் உங்களது கடைகளுக்கு டெலிவரி ஆர்டர் செய்யும் நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். இது போன்ற பண மோசடி நடைபெற்றால் சைபர் கிரைம் இணையதளத்தில் cybercrime.gov.in அல்லது 1930 எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் பதிவு செய்யலாம், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.