சென்னை: வடபழனி பகுதியில் நடந்து சென்ற 2 பெண்களை அவதூறாக பேசி தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னை, கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் 19 வயது கல்லூரி மாணவி பகுதி நேரமாக தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 20.02.2025 அன்று இரவு மேற்படி மருத்துவமனையில் வேலை முடித்து அங்கு வேலை செய்து வரும் அவரது தோழியுடன் வீட்டிற்கு செல்வதற்காக வடபழனி, வெள்ளாளர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு மது போதையில் இருந்த நபர் ஒருவர் மேற்படி 2 பெண்களையும் வழிமறித்து அவதூறாக பேசி கன்னத்தில் அறைந்து கீழே தள்ளிவிட்டு, தப்பிச் சென்றார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் போலீசார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை விசாரணை மேற்கொண்டனர்.
வடபழனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட வடபழனி கங்கை அம்மன் கோயில் தெரு முருகன் மகன் அருகதாஸ் (44) என்பவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட எதிரி அருகதாஸ் விசாரணைக்குப் பின்னர் நேற்று (21.02.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» பள்ளி ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் லஞ்சம்: நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கைது
» 14 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது: மயிலாடுதுறை அதிர்ச்சி