பழநி: பழநியில் ஒப்பந்ததாரரிடம் ரூ.18 ஆயிரம் லஞ்சம் பெற்ற தேவஸ்தான செயற்பொறியாளர் பிரேம்குமாரை, அலுவலகத்தில் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தேவஸ்தானம் சார்பில் ஒட்டன்சத்திரத்தில் ரூ.71 லட்சம் மதிப்பில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் செந்தில்குமார்,
பணிகள் முடிந்ததால், அதற்கான நிதியை (பில்) விடுவிக்க, ஒப்புதல் தர தேவஸ்தான கட்டிட பிரிவு செயற்பொறியாளர் பிரேம்குமாரை அணுகினார். இதற்காக, ரூ.18 ஆயிரம் லஞ்சமாக பிரேம்குமார் கேட்டார். இது குறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் செந்தில்குமார் புகார் அளித்தார்.
பின்னர், போலீஸார் அறிவுரையின்படி, ரசாயனம் தடவிய ரூ.18 ஆயிரத்தை இன்று வெள்ளிக்கிழமை (பிப்.21) மாலை, பழநி தேவஸ்தான அலுவலகத்தில் உள்ள பொறியாளர் பிரிவு அலுவலகத்தில் வைத்து செந்தில்குமார், பிரேம்குமாரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான போலீஸார், பிரேம்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.