தருமபுரி: பாலக்கோடு அருகே டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் கம்பி திருடிச் சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அடுத்த ஜக்கசமுத்திரம் பகுதியில் உள்ள கோடிக்கானூர் கிராமத்தில் மின்வாரிய டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டிருந்தது. இந்த டிரான்ஸ்பார்மரை 2 நாட்களுக்கு முன்பு இரவில் கம்பத்தில் இருந்து கீழே தள்ளிய மர்ம நபர்கள் அதை உடைத்து உள்ளிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை திருடிச் சென்றிருந்தனர்.
இது தொடர்பாக மின்வாரிய உதவி பொறியாளர் திவாகர் மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், செல்போன் சிக்னல்களின் நடமாட்டத்தின் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில் பாலக்கோடு அடுத்த வெள்ளிச் சந்தையைச் சேர்ந்த பழைய இரும்பு கடைக்காரர் முருகன் (38), பந்தாரஅள்ளியைச் சேர்ந்த செல்வகுமார் (32), கல்லூரி மாணவர் கவி (19) ஆகியோருக்கு இந்த திருட்டில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, அவர்களை கைது செய்த போலீஸார் 3 பேரையும் தருமபுரி சிறையில் அடைத்தனர்.