ஆவடி அருகே குடும்ப பிரச்சினையால் மனைவி கொலை: கணவன் தற்கொலை முயற்சி

By இரா.நாகராஜன்

ஆவடி: திருமுல்லைவாயிலில் குடும்ப பிரச்சினையால் மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயில்- கமலம் நகரைச் சேர்ந்தவர் விநாயகம்( 72.) இவரது மனைவி தனலட்சுமி(60). மாற்றுத்திறனாளியான விநாயகம் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து ஓய்வுப் பெற்றவர்.

கணவன், மனைவி இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு, உணவு பரிமாறும் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த விநாயகம், கத்தியால் தனலட்சுமியை குத்தி கொலை செய்துவிட்டு, தன் வயிற்றில் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதுகுறித்து, அவரது மகன்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடம் விரைந்த திருமுல்லைவாயில் போலீஸார் தனலட்சுமி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காகசென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விநாயகத்தை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE