சேலம்: அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆய்வக உதவியாளரை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக குமரேசன் (57) பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி ஆய்வகத்துக்கு வந்த மாணவிகளுக்கு குமரேசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் பள்ளி வகுப்பு ஆசிரியரிடம் புகார் தெரிவித்த நிலையில், தலைமை ஆசிரியர் இளங்கோவின் கவனத்துக்கு அவர் கொண்டு சென்றார். பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோ, மாணவிகள் கூறிய புகார் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை செய்ததில், ஆய்வக உதவியாளர் பாலியல் தொல்லை கொடுத்ததை உறுதி செய்தனர். இதனையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் இளங்கோ, அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆய்வக உதவியாளர் குமரேசன் மீது புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் அம்மாப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு, ஆய்வ உதவியாளர் குமரேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நேற்று முன்தினம் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
» சிறுமி பாலியல் வன்கொடுமை: போக்சோவில் நத்தம் இளைஞருக்கு 50 ஆண்டுகள் சிறை
» அவிநாசிபாளையம் அருகே விஷம் வைத்து 14 நாய்கள் கொலை: போலீஸார் தீவிர விசாரணை