திருப்பூர் காங்கயம் சாலை நாச்சிபாளையம் வண்ணாந்துறை புதூரை அடுத்த ஜெயலட்சுமி நகரில் விஷம் வைத்து நாய்கள் மற்றும் கோழிகள் கொல்லப்பட்டதாக விலங்குகள் நல ஆர்வலர்கள், அவிநாசிபாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாரும், விலங்குகள் நல ஆர்வலர்களும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.
அதில், ஜெயலட்சுமி நகரில் கடந்த 16-ம் தேதி விவசாயிகள் வளர்த்து வந்த 15 கோழிகள் நாய்கள் கடித்து உயிரிழந்தது தெரியவந்தது. இந்நிலையில், சாதத்தில் மர்ம நபர்கள் விஷம் வைத்ததில், சிலரது வளர்ப்பு நாய்களும், தெரு நாய்களும் என 14 நாய்கள் உயிரிழந்ததும், நாய்களின் உடல்கள் அதே பகுதியில் புதைக்கப்பட்டதும் தெரியவந்தது.
தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீஸார் இணைந்து நாய்களின் உடல்களை தோண்டி எடுத்து, மர்ம நபர்கள் தொடர்பாக விசாரிக் கின்றனர்.