திருப்பூர்: கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்த நரசிபுரத்தை சேர்ந்தவர் லட்சுமி (49). இவர் திருப்பூர் பாண்டியன் நகர் அருகில் உள்ள அண்ணாநகரில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார்.
அதே பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 3- ம் தேதி லட்சுமியின் வீட்டில் பயங்கர சத்தம் கேட்டது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது, லட்சுமி சடலமாக கிடந்தார். அவரது வீட்டில் இருந்து மர்ம நபர் ஓடினார். அவரை பிடித்து, திருமுருகன்பூண்டி போலீஸில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
அந்த நபரை கைது செய்து போலீஸார் விசாரித்ததில், அந்நபர் அதே பகுதியை சேர்ந்த பூபதி (25) என்பதும், போதையில் லட்சுமியின் வீட்டுக்கு சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது. லட்சுமி சத்தமிட்டதால், தோசைக் கல்லால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது.
இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று நீதிபதி எம்.சுரேஷ் தீர்ப்பளித்தார். அதில், பூபதிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பூபதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜமிலாபானு ஆஜரானார்.
» சாயல்குடி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தற்கொலை
» கேரளாவுக்கு கடத்த முயன்ற 5,145 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் - மூவர் கைது