கொள்ளையடித்த பணத்தை பிரித்துக் கொடுக்க மறுத்தவர் கொலை: சென்னையில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

By KU BUREAU

சென்னை: கொள்ளையடித்த பணத்தை பிரித்துக் கொடுக்க மறுத்த இளைஞரை கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த தரணியும் (24). அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணனும் (26) கடந்த 2015 மே 14 அன்று ஆந்திராவில் கொள்ளையடித்த பணத்துடன் சென்னைக்கு வந்துள்ளனர். அப்போது கொள்ளையடித்த பணத்தை பிரித்துக் கொடுக்கும்படி கலைவாணன் கேட்க, தரணி பங்கு தர மறுத்துள்ளார்.

இதையடுத்து கடந்த 2015 ஜூன் 20 அன்று சேப்பாக்கம் எல்லீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த தரணியை, கலை வாணன் தனது கூட்டாளி களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். இந்த கொலைச்சம்பவம் தொடர்பாக திருவல்லிக் கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கலைவாணன் (26), கேசவன் (24), ராஜேந்திரப் பிரசாத் (24), விஜி (25), ஸ்ரீகாந்த் (25), முகமது ரஹீம் (24), ஆஷிப் ஜேக்கப் (20), பாபு (19), சந்துரு (25), பாபு (24) ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு சென்னை 19-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.ராஜ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கலைவாணன் இறந்து விட்டதால் மற்றவர்கள் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது. போலீஸ் தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.தனசேகர் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட கேசவன், ராஜேந்திரப் பிரசாத்,விஜி,ஸ்ரீகாந்த், ஆஷிப்ஜேக்கப் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், மற்றவர்களை விடுதலை செய்தும் தீர்ப்பளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE