இளையான்குடி அருகே கண்மாயில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு

By இ.ஜெகநாதன்

இளையான்குடி: இளையான்குடி அருகே பள்ளி மற்றும் அங்கன்வாடி மைய மாணவிகள் 2 பேர் கண்மாயில் மூழ்கி உயிரிழந்தனர். உடல்களை எடுக்க அனுமதி மறுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆழிமதுரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம் அருகருகே உள்ளன. அப்பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் மகள் சோபிதா (8) அப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். அவரது சகோதரர் கண்ணன் மகள் கிறிஸ்மிகா (4) அங்கன்வாடி மையத்தில் பயின்று வந்தார். இன்று பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்துக்கு சென்ற இரு குழந்தைகளும் காலை 10 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க அருகேயுள்ள கண்மாய்க்கு சென்றனர்.

இதனை ஆசிரியரும், அங்கன்வாடி மைய ஊழியரும் கவனிக்கவில்லை. இந்நிலையில், கிறிஸ்மிகாவை வீட்டுக்கு அழைத்து செல்ல பிற்பகல் 1 மணிக்கு அவரது தாயார் மையத்துக்கு சென்றுள்ளார். ஆனால் அவரையும், பள்ளியில் இருந்த சோபிதாவையும் காணவில்லை. இதையடுத்து அருகேயுள்ள கண்மாயில் தேடியபோது இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், கிராம மக்கள் பள்ளி, அங்கன்வாடி மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஆழிமதுரை ஊராட்சி தொடக்கப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய கிராம மக்கள்

மேலும் பிரேத பரிசோதனைக்காக குழந்தைகளின் உடல்களை எடுத்துச் செல்லவும் அனுமதிக்கவில்லை. அவர்களிடம் கோட்டாட்சியர் விஜயகுமார், முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து பேச்சுவார்த்தை நடத்தி ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதை ஏற்க மறுத்து, மாவட்ட ஆட்சியர் நேரில் வர வேண்டும். குழந்தைகளை இழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அதைத்தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் கோரிக்கை தொடர்பாக இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மாலை 6 மணிக்கு உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து உடல்களை இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

முதல்வர் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு: இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இரண்டு குழந்தைகள் கண்மாயில் மூழ்கி உயிரிழந்ததை அறிந்து வருத்தமும், வேதனையும் அடைந்தேன். சிறுமிகளின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். மேலும் அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE