தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கண்டனம்

By KU BUREAU

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது போன்ற கருப்பு நாட்கள் தொடர்கதையாவது மிகவும் கண்டனத்திற்கு உரியது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது ஸ்டாலின் மாடல் ஆட்சியின் பங்காளர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம். சங்க காலம் முதலே பெண் இனத்தை போற்றிப் பாதுகாத்து வந்த தமிழக வரலாற்றில், இது போன்ற கருப்பு நாட்கள் தொடர் கதையாவது மிகவும் வருத்தத்திற்கும் , கண்டனத்திற்கும் உரியதாகும் .

பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கும் நாடுகளில் கூட இத்தகைய கொடூரம் நடந்ததில்லை என எண்ணும் அளவு இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்களை உரிய முறையில் தடுக்காமல் , பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தவறியதால், இத்தகைய கொடூரங்கள் தினந்தோறும் நிகழ்கின்றன. இந்த ஆட்சியில் தமிழ்நாடு இப்படி சிக்கிச் சீரழிந்து வருவது குறித்து எந்தக் கவலையுமில்லாத ஸ்டாலின், ‘பெண்களுக்கு பாதுகாப்பு’ என வாய்சவடால் மட்டும் பேசினால் போதுமா ?

திமுக ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான் தொடர்கிறது, இனியாவது ஸ்டாலின் மாடல் அரசு விழித்து கொண்டு, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE