சேலம்: செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டிருந்த தாயை அடித்து கொலை செய்ததாக 2 மகன்கள், தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டு உடையார் பாளையம் புதிய காலனியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி பொன்னுவேல் (45). இவரது மனைவி வசந்தி (38). இவர்களது மகன் கவின் (20). தந்தையுடன் கட்டிட வேலைக்கு சென்று வருகிறார். 17 வயதுடைய இளைய மகன் நடன கலைஞராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக வசந்தி அடிக்கடி செல்போனில் யாரிடமோ பேசியுள்ளார். இதனை கணவர், மகன்கள் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வசந்தியை படுகாயத்துடன் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அவரது மகன்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வசந்தி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஏத்தாப்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் நடத்திய விசாரணையில், வசந்தி செல்போனில் அடிக்கடி பேசியதை அவரது கணவர் கண்டித்துள்ளார். பின்னர் பொன்னுவேல் வீட்டிலிருந்து வெளியேறியதும் அவரது மகன்கள் தாயை பலமாக தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, பொன்னுவேல், கவின் மற்றும் 17 வயது சிறுவனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
» புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: உதவி தலைமை ஆசிரியர் கைது
» கடலூரில் ஓரினசேர்க்கைக்கு மறுத்த சிறுவன் கொலை: போக்சோவில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை