கடலூரில் ஓரினசேர்க்கைக்கு மறுத்த சிறுவன் கொலை: போக்சோவில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

By KU BUREAU

கடலூர்: ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் சிறுவனை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடியை சேர்ந்தவர் ஆனந்த் (24). இவர் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா (17) . இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இருவரும் ஒரே ஊர் என்பதால் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் ஆனந்த், ஜீவாவை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளார். ஜீவா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஜீவா இன்ஸ்டா கிராம் மூலம் ஒரு பெண்ணிடம் பழகி வந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட ஆனந்த் இன்ஸ்டாகிராமில் ‘ஸ்க்ரீன் ஷாட்’ எடுத்து வைத்துக்கொண்டு, ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காவிட்டால் இதை மற்றவர்களிடம் சொல்லி விடுவேன் என்று ஜீவாவை மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜீவா, ஆனந்தின் செல்போனை பிடுங்கி உடைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி அன்று ஜீவா பள்ளிக்குச் சென்ற போது, ஆனந்த் அவரை வழிமறுத்து கத்தியால் குத்தி கொலை செய்தார். இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சாட்சிகள் விசாரணை நடந்து வந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி லட்சுமி ரமேஷ் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், ஆனந்த் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலரேவதி ஆஜரானார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE