உதவி செய்வதுபோல நடித்து, ஏடிஎம் அட்டையை மாற்றி ரூ.1.61 லட்சம் நூதன திருட்டு: கோவையில் மோசடி

By KU BUREAU

கோவை: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஷாஜி (42). இவர் சினிமா பட தயாரிப்பு நிறுவனத்தில் சமையல் கலைஞராக உள்ளார். கோவையில் நடைபெற்றுவரும் மலையாள படப்பிடிப்புக்காக ஷாஜி மற்றும் குழுவினர் வந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் காட்டூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கினர். ஷாஜி பணம் எடுப்பதற்காக, நேற்று முன்தினம் டாக்டர் நஞ்சப்பா சாலையிலுள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். பணம் எடுக்கும்போது, அருகில் நின்ற 30 வயதான இளைஞர் ஷாஜி கார்டின் ரகசிய எண்ணை டைப் செய்யும்போது பார்த்து தெரிந்து கொண்டார். பணம் எடுத்ததும், ஷாஜி கார்டை எடுக்க முயன்றார். உடனே அந்நபர், “கார்டை எடுத்தால் உள்ளே சிக்கிவிடும், சில நிமிடம் கழித்து எடுங்கள்” எனக் கூறியுள்ளார்.

அதை நம்பிய ஷாஜி, சிறிது நேரம் காத்திருந்தார். பின்னர் அந்த இளைஞர் ஏ.டி.எம் கார்டை எடுத்து ஷாஜியிடம் கொடுத்தார். அவர், ஹோட்டலுக்கு வந்த பின்னர் அவரது கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக செல்போனில் குறுஞ்செய்தி வந்து கொண்டேயிருந்தது. அவருடைய வங்கி கணக்கில் மொத்தம் ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் எடுக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் தனது ஏடிஎம் கார்டை எடுத்து பார்த்தபோது அது மாறியிருந்தது.

ஏடிஎம் மையத்தில் இருந்த நபர் வேறு கார்டை தன்னிடம் கொடுத்துவிட்டு, தனது கார்டை திருடிச் சென்று, நூதன முறையில் பணத்தை எடுத்தது தெரியவந்தது. இது குறித்து ஷாஜி அளித்த புகாரின் பேரில் காட்டூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE