தேவகோட்டை: தேவகோட்டையில் கடனுக்கு மளிகை பொருட்களை கொடுக்க மறுத்த கடை உரிமையாளரை தாக்கிய திமுக நிர்வாகிகள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகரைச் சேர்ந்தவர் அப்துல்ஜாபர் (40). திமுக 11-வது வட்டச் செயலாளராக உள்ளார். இவர் எழுவன்கோட்டை சாலையில் அயூப்கான் (33) என்பவர் நடத்தி வரும் மளிகை கடையில் பொருட்கள் வாங்கி வந்துள்ளார். ஆனால் அதற்குரிய பணத்தை முறையாக கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அந்த கடையில் அப்துல்ஜாபர் மகன் ரூ.110-க்கு மளிகை பொருட்களை வாங்கியுள்ளார். ஆனால் பணம் கொடுக்கவில்லை. இதனால் நேற்று இரவு மளிகை கடைக்கு வந்த அப்துல்ஜாபர் மகனிடம் பொருட்களை தர அயூப்கான் மறுத்துவிட்டார். பொருட்கள் தராதது குறித்து தனது மகன் கூறியதை கேட்டு வீட்டில் இருந்த அப்துல்ஜாபர் ஆத்திரமடைந்தார்.
இதையடுத்து அவர், தனது நண்பரும் திமுக முன்னாள் இளைஞரணி நிர்வாகியுமான கண்ணங்கோட்டையைச் சேர்ந்த லெட்சுமணனுடன் (43) சேர்ந்து அயூப்கானை தாக்கினர். மேலும் கடையில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர். இதுகுறித்து டிஎஸ்பி கவுதம் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து தேவகோட்டை நகர் போலீஸார் வழக்கு பதிந்து அப்துல்ஜாபர், லெட்சுமணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
» வலது Vs இடது - எந்தப் பக்கம் படுத்து உறங்குவது நல்லது?
» நீர் நிலையில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்ட உயர் நீதிமன்றம் தடை