தஞ்சாவூர்: 14 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை வல்லம் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். மேலும், சிறுமியின் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காணவில்லை. அவர் தஞ்சாவூர் பகுதிக்கு வந்திருக்கலாம் என சிறுமியின் பெற்றோர் அளித்த புகார் தஞ்சாவூர் போலீஸாருக்கு வந்துள்ளது. இதையடுத்து, போலீஸார் அந்த சிறுமியின் புகைப்படத்தை வைத்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஒரு இளைஞருடன் அந்த சிறுமி நிற்பதை பார்த்த போலீஸார், சிறுமி மற்றும் இளைஞரை பிடித்து விசாரித்துள்ளனர். இதில், அந்த இளைஞர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து, போலீஸார் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இருவரையும் அழைத்து சென்று, ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து, அனைத்து மகளிர் போலீஸார் அந்த சிறுமியை விசாரித்தனர்.
விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் சின்னக்கோட்டைகாடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான எஸ்.ஜெகதீஸ்வரன் (24) சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, இந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த சிறுமியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜெகதீஸ்வரன் சென்னையில் இருந்து தனது ஊருக்கு வந்துவிட்டார். பின்னர், அந்த சிறுமி ஜெகதீஸ்வரனுக்கு போன் செய்தபோது தஞ்சாவூருக்கு புறப்பட்டு வா என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிறுமி தஞ்சாவூருக்கு புறப்பட்டுள்ளார். இத்தகவலை ஜெகதீஸ்வரனுக்கும் தெரிவித்துள்ளார். அப்போது, ஜெகதீஸ்வரன் இப்போது பேசிக் கொண்டு இருக்கும் செல்போனில் உள்ள சிம்கார்டை மாற்றி, வேறு ஒரு சிம்கார்டு போட்டு பேசு என்று தெரிவித்துள்ளார். அதேபோல, சிறுமியும் செய்துள்ளார்.
» கோவையில் 17 வயது சிறுமி 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
» தள்ளுவண்டி வாங்க கடன் பெற்றுத் தருவதாக பெண்ணிடம் பணம் பறிப்பு: விழுப்புரம் ஆட்சியரிடம் மனு
பின்னர், பிப்.13ம் தேதி தஞ்சாவூருக்கு வந்த சிறுமி ஜெகதீஸ்வரனுக்கு போன் செய்துள்ளார். ஆனால், அவர் எடுக்கவில்லை. பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் ஜெகதீஸ்வரனை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், அந்த சிறுமி செய்வதறியாது அழுது கொண்டே தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்துள்ளார். இதை கவனித்த தஞ்சாவூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த சி.புவனேஸ்வரன் (30) அந்த சிறுமியிடம் எதற்காக அழுகிறாய் என்று கேட்டுள்ளார். அவரிடம் சிறுமி விவரங்களை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, உனது காதலனுடன் சேர்த்து வைக்கிறேன் என்று கூறி, சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற புவனேஸ்வரன், சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து 3 நாட்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர், சென்னைக்கு பேருந்து ஏற்றி விட மீண்டும் புதிய பேருந்து நிலையத்துக்கு அழைத்து வந்தபோது போலீஸில் சிக்கி உள்ளார்.
இதையடுத்து, வல்லம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து புவனேஸ்வரனை கைது செய்தனர். மேலும், சிறுமியின் காதலனான ஜெகதீஸ்வரனும் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர், சிறுமியை பெண்கள் காப்பகத்தில் போலீஸார் ஒப்படைத்தனர்.