விழுப்புரம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
அப்போது கைக் குழந்தையுடன் பெண் ஒருவர் நீண்ட நேரமாகக் காத்திருந்ததைக் கண்ட போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அந்த பெண், விழுப்புரம் காந்தி சிலை அருகில் உள்ள வாய்க்கால் தெரு இந்திரா வீதியைச் சேர்ந்த விஜய் மனைவி திலோத்தமா (26) என்பதும், காந்தி சிலை பகுதியில் தர்பூசணி பழ வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் தனது கடைக்கு கடந்த சனிக்கிழமை வந்த நபர் தனது பெயர் அருண் எனக்கூறி, வியாபாரம் செய்வதற்காக அரசு மூலம் தள்ளுவண்டி வாங்க கடன் பெற்றுத் தருவதாகவும், இதற்காக ஆட்சியர் அலுவலகத்துக்கு வருமாறும் கூறியிருந்தார்.
அதனால் கணவர் விஜயுடன் இங்கு வந்தேன். ஆட்சியரக நுழைவாயில் அருகே தன்னிடம் ரூ.2,500 பணத்தை அவர் வாங்கிக்கொண்டு முதல் தளத்தில் அலுவலரை சந்தித்துவிட்டு வரும் வரை காத்திருக்குமாறு கூறிச் சென்றார். அதற்காக காத்திருக்கிறோம் எனக் குறிப்பிட்டார்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், திலோத்தமாவையும், அவரது கணவர் விஜயையும் தாலுகா காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளிக்குமாறு கூறினர். தொடர்ந்து அவர்கள் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
» தேனி அதிர்ச்சி: தங்களுக்கு எதிராக சாட்சி கூறியவர்களை கொல்ல திட்டமிட்ட 3 பேர் கைது
» பட்டா மாறுதலுக்கு ரூ.37 ஆயிரம் லஞ்சம்: லஞ்சம் வாங்கிய ராமநாதபுரம் விஏஓ சஸ்பெண்ட்