கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அடுத்த கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மகன்கள் சிலம்பரசன், கவியரசன், செந்தில் ஆகியோருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மூவரும் அருள் வீட்டுக்கு சென்றனர்.
அங்கு அவர் இல்லாத நிலையில் அவரது உறவினர் நாராயணன் (65) என்பவரிடம் விசாரித்துவிட்டு சென்றனர். இதைத்தொடர்ந்து நாராயணன், சிலம்பரசன் உள்ளிட்ட 3 பேரிடமும், அருளை தான் கண்டிப்பதாக கூறியதாக தெரிகிறது. ஆனால் நாராயணனின் சமரசத்தை ஏற்க மறுத்த கவியரசன், சிலம்பரசன், செந்தில் ஆகியோர் நாராயணனை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
அக்கம்பக்கத்தினர் உடனே உளுந்தூர்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.