ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் பட்டா பெயர் மாற்றத்துக்கு விவசாயியிடம் ரூ.37 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் குமிழேந்தல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய பகவதி மங்களம் குரூப் கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபனை (29) அணுகியுள்ளார். அதற்கு விஏஓ ரூ.37 ஆயிரம் கேட்டு, ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள தனியார் இ-சேவை மையத்தில் பணத்தை கொடுக்கச் சொல்லியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த விவசாயி ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
போலீஸாரின் அறிவுரையின்படி கடந்த 7ம் தேதி இரவு இ-சேவை மையத்தில் அதன் உரிமையாளர் அஹமது ஜப்பிரின் அலியிடம், விவசாயி ரூ.37 ஆயிரம் லஞ்சப் பணத்தை கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் அவரை கைது செய்தனர். தகவலறிந்த விஏஓ தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், விஏஓ பார்த்திபனை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் நேற்று உத்தரவிட்டார்.