மீஞ்சூரில் காணாமல் போன இளைஞர் மழைநீர் வடிகாலில் சடலமாக மீட்பு

By இரா.நாகராஜன்

பொன்னேரி: மீஞ்சூரில் காணாமல் போன இளைஞர் கழிவுநீர் கால்வாயாக மாறிய மழைநீர் வடிகால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை- புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் அசோக்குமார் (38). இவர் கடந்த 15-ம் தேதி மாலை தன் நண்பரின் மகன் திருமண விழாவில் பங்கேற்பதற்காக மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு வந்தார். ஆனால், அன்று இரவு நீண்ட நேரமாகியும் அசோக் குமார் வீடு திரும்பவில்லை. மேலும், அவரது மொபைல் போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

பல இடங்களில் தேடியும் அசோக்குமார் கிடைக்காததால், அவரது தாய் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று (பிப்.17) காலை மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் முன்பு மீஞ்சூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், தூய்மை பணியில் ஈடுபட்ட போது, கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ள மழைநீர் வடிகால்வாயில், காணாமல் போன அசோக்குமார் சடலமாக கிடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸார் அசோக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார், திருமண நிகழ்ச்சிக்கு வந்த அசோக்குமார், மதுபோதையில் மழைநீர் வடிகாலில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது யாரேனும் அடித்து கொலை செய்தனரா? உள்ளிட்ட கோணங்களிலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE