கிருஷ்ணகிரி: தபால் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கிருஷ்ணகிரி அருகே பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கில் 2 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே வாடமங்கலத்தைச் சேர்ந்தவர் ரம்யா (32). இவரிடம் போச்சம்பள்ளி அருகே பாப்பனூரைச் சேர்ந்த சுபாஷ் (42), கீழ்குப்பம் சுரேஷ் (40) ஆகியோர் அணுகி, தபால் துறையில் உங்களுக்கு வேலை வாங்கி தருகிறோம் என கூறியுள்ளனர். இதை நம்பி ரம்யா அவர்களிடம் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, டெல்லியில் பணி வழங்கப்பட்டிருப்பதாகக் கூறி பணி ஆணையை ரம்யாவிடம், சுபாஷ் மற்றும் சுரேஷ் வழங்கியுள்ளனர். இந்த ஆணையுடன் ரம்யா டெல்லி என்றபோது, அந்த ஆணை போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து, பாரூர் காவல் நிலையத்தில் ரம்யா நேற்று முன் தினம் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து, சுபாஷ் மற்றும் சுரேஷை கைது செய்தனர்.
ஓசூர் அருகே 2 பேர் கைது
» சென்னை ரயில் நிலையத்தில் பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல்: அண்ணாமலை கண்டனம்
» விபரீதத்தில் முடிந்த குடும்ப தகராறு - மனைவி கொன்ற தொழிலாளி கைது - பெரம்பலூர் அதிர்ச்சி
ஓசூர் அருகே சினரம்பட்டி பகுதியில் பேரிகை போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையைச் சோதனை செய்தபோது, அதில் 6 பெட்டிகளில் 51 லிட்டர் கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து, இருசக்கர வாகனத்துடன் மது பாக்கெட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து, மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்த ராமன்தொட்டியைச் சேர்ந்த ஜெயராமன் (26), முனிராஜ் (37) ஆகியோரை கைது செய்தனர்.