சென்னை ரயில் நிலையத்தில் பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல்: அண்ணாமலை கண்டனம்

By KU BUREAU

சென்னை: பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது. அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. ஒட்டு மொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார்.

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளிவருகிறது. அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

திமுக அரசும், காவல்துறையும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறாரா முதலமைச்சர் ஸ்டாலின்?’ எனத் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE