விபரீதத்தில் முடிந்த குடும்ப தகராறு - மனைவி கொன்ற தொழிலாளி கைது - பெரம்பலூர் அதிர்ச்சி

By கவிதா குமார்

பெரம்பலூர்: குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த தொழிலாளியை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள தொண்டமாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேலு (49). கல்லுடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள் (45). இவர்களுக்கு கவிதா (23) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், கவிதாவின் கணவர் வெளிநாட்டில் இருப்பதால் கவிதா தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், ஒரு மாதத்துக்கு முன்பு மனைவி மாரியம்மாளுடன் தகராறு செய்துவிட்டு வெளியே சென்ற தங்கவேலு நேற்று காலை மதுபோதையில் வீட்டுக்கு வந்து, மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

அப்போது, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மாரியம்மாளை தங்கவேலு குத்தியதாகக் கூறப்படுகிறது. அதைத் தடுக்கச் சென்ற கவிதாவுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த மாரியம்மாள் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த கவிதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து அரும்பாவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தங்கவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE