கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய மேஸ்திரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
சேத்தியாத்தோப்பு அருகே தரசூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் அதேபகுதியைச் சேர்ந்த குலோத்துங்கள் என்பவர் தனது 300 நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்றார். அங்கு மேஸ்திரியாக இருக்கும் வேல்மணி (39) என்பவர் ஒரு மூட்டைக்கு ரூ.55 வீதம் 300 மூட்டைக்கு ரூ.16,500 கொடுத்தால் தான் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து குலோத்துங்கன் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் அறிவுறுத்தல்படி நேற்று முன்தினம் இரவு நேரடி கொள்முதல் நிலையம் சென்ற குலோத்துங்கன் ரூ.16,500-ஐ மேஸ்திரி வேல்மணியிடம் தந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு கடலூர் டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீஸார், மேஸ்திரி வேல்மணியை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் விசாரணை செய்ததில் இது நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக வாங்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து மேஸ்திரி வேல்மணியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.