தென்காசி: சேந்தமரம் அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மரியா ஆரோக்கிய செல்வி (30). இவர், கடந்த 5-ம் தேதி தனது கணவர் முத்துக்குமார் மஞ்சள் காமாலை நோயால் மயங்கிய நிலையில் இருப்பதாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக ஆம்புலன்ஸ் அங்கு விரைந்து சென்றது. முத்துக்குமாரை ஆம்புலன்ஸ் செவிலியர் பரிசோதித்துள்ளார். அப்போது, அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அவரது மரணத்தில் சந்தேகம் இருந்ததால் சேர்ந்தமரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்த மரியா ஆரோக்கிய செல்வி, தனது கணவர் முத்துக்குமார் வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வந்து தகராறு செய்ததால் தனது 12 வயது மகன் உதவியுடன் கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, நாடகமாடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதற்கிடையே, பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் முத்துக்குமார் கழுத்து நெரிக்கப்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, மரியா ஆரோக்கிய செல்வி மற்றும் அவரது மகனை சேர்ந்தமரம் போலீஸார் கைது செய்தனர்.
» கடலூர் சிறுமியிடம் சமூக வலைதளம் மூலம் பழகி தவறாக பயன்படுத்திய இளைஞர்: குண்டர் சட்டத்தில் கைது
» வடமதுரை அருகே கார் டயர் வெடித்து விபத்து: பைக்கில் சென்ற பூ வியாபாரி உயிரிழப்பு