ஆத்தூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை - நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் கைது

By KU BUREAU

சேலம்: ஆத்தூர் அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், உடனடி நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் உள்பட மூன்று ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர்.

ஆத்தூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவிக்கு, அதே பள்ளியில் பயிலும் பிளஸ் 1 மாணவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுசம்பந்தமாக ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரித்து, 3 மாணவர்களையும் சில தினங்களுக்கு முன்னர் போக்சோ சட்டத்தில் கைது செய்து, கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், இந்த விவகாரம் குறித்து ஆசிரியர்களிடம் மாணவியின் தரப்பில் புகார் தெரிவித்தும், அதனை மறைத்து நடவடிக்கை எடுக்கவி்ல்லை.

மேலும் இந்த விவகாரத்தை மறைத்து, துரித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், தலைமை ஆசிரியரான வாழப்பாடியை சேர்ந்த முத்துராமன் (54), கீரிப்பட்டியை சேர்ந்த ஆசிரியர் ராஜேந்திரன்(59), ஆத்தூர் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த ஆசிரியை பானுப்பிரியா(37) ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்த போலீஸார், மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆட்சியரிடம் அதிமுக புகார்: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அதிமுக சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் எம்.பி.சந்திரசேகரன், எம்எல்ஏக்கள் மணி, ராஜமுத்து, சித்ரா, ஜெய்சங்கரன், நல்லதம்பி மற்றும் நிர்வாகிகள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம்கோயல், ஆட்சியர் பிருந்தாதேவியை நேற்று சந்தித்து புகார் அளித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE