ஆவடியில் போர் தளவாட பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

By இரா.நாகராஜன்

ஆவடி: ஆவடியில் உள்ள போர் தளவாட பொருட்களை உற்பத்தி செய்யும் ஏவிஎன்எல் நிறுவனத்தின் தலைமையகத்துக்கு மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ், போர் டாங்கிகள் உள்ளிட்ட போர் தளவாட பொருட்களை உற்பத்தி செய்கிறது ஏவிஎன்எல் (Armoured Vehicles Nigam Limited). இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம், ஆவடி- கனரக வாகன தொழிற்சாலை சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த அலுவலகத்துக்கு, அலுவலக மின் அஞ்சல் முகவரிக்கு மின் அஞ்சல் ஒன்று வெள்ளிக்கிழமை மதியம் 2.50 மணிக்கு வந்தது.

அதில், ‘ஏவிஎன்எல் தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது’ என, குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஏவிஎன்எல் தலைமை அலுவலக அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில், ஏவிஎன்எல் தலைமை அலுவலகத்துக்கு விரைந்த ஆவடி டேங்க் ஃபேக்டரி போலீஸார், ஏவிஎன்எல் தலைமை அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அலுவலகத்தில் இருந்து வெளியேற்றினர்.

தொடந்து, ஏவிஎன்எல் தலைமை அலுவலகத்துக்கு வந்த 5 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர் குழுவினர் மோப்பநாய் உதவியுடன், அலுவலகம் முழுவதும் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். 2 மணி நேரத்துக்கு மேல் நீடித்த அந்த சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள ஆவடி டேங்க் ஃபேக்டரி போலீஸார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE