திருப்பத்தூர் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊராட்சி வார்டு உறுப்பினரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் தில்லை நகரைச் சேர்ந்தவர் மகேந்திரன்(45). இவர், பாச்சல் ஊராட்சி 11-வது வார்டு உறுப்பினராக உள்ளார். மேலும், அப்பகுதி திமுக கிளை செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு மகேந்திரன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து,சிறுமியின் தாயார் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் மகேந்திரன் மீது போக்சோ சட்டம் பதிவு செய்து அவரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போக்சோ வழக்கில் திமுக கிளை செயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.