திருச்சி: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் நேற்று கல்லூரி வாயில் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர், அந்த மாணவிக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். இதனால், அந்த மாணவி சத்தம் போடவே அந்த இளைஞர் தப்பி ஓடிவிட்டார். அப்போது, அங்கிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், அந்த இளைஞர் ஒரு பைத்தியம் என கூறிவிட்டு சென்றுள்ளார்.
பின்னர், இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் அந்த மாணவி கூறியுள்ளார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கல்லூரிக்குச் சென்றனர். பின்னர், மாணவி சொன்ன அடையாளத்தை வைத்து தீரன் நகரில் நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தி என்பவரைப் பிடித்து விசாரித்தனர். ஆனால், அவர் தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறியதால், அவரை தாக்கியதுடன், அவரை ஆட்டோவுடன் கல்லூரிக்கு அழைத்து வந்தனர்.
தகவலறிந்த நீதிமன்ற போலீஸார் அங்கு சென்று அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர். அங்கு மாணவியின் தரப்பினருக்கும், ஆட்டோ ஓட்டுநர் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரையும் போலீஸார் சமாதானம் செய்தனர். பின்னர், மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நீதிமன்ற போலீஸார் வழக்கு பதிவு செய்து மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை தேடி வருகின்றனர்.
» சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆய்வக தொழில்நுட்புநர் சஸ்பெண்ட்
» மீன்குழம்பில் விஷம் வைத்து கணவர் கொலை: கூடா நட்பால் விபரீதம்; கடலூரில் பெண் கைது!