சுடு தண்ணீர் ஊற்றி கணவர் கொலை - மனைவி, மாமியாருக்கு ஆயுள் சிறை @ திருச்சி

By தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: திருவெறும்பூர் அருகே கணவரை சுடு தண்ணீர் ஊற்றி கொலை செய்த வழக்கில் மனைவி, மாமியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருச்சி - திருவெறும்பூர், பர்மாகாலனியைச் சேர்ந்த ராஜேந்திரன்-சந்தரகலா தம்பதியர் மகன் செல்வராஜ் (27). கூலித் தொழிலாளி. இவருக்கும் பாரதிபுரத்தை சேர்ந்த சூசைராஜ்-இன்னாசியம்மாள் தம்பதியர் மகள் டயானா மேரிக்கும் (23), கடந்த 20-5-2018 அன்று திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

செல்வராஜ் மது அருந்தி விட்டு அடிக்கடி தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2023-ம் மார்ச் மாதம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வெறுப்படைந்த டயானா மேரி கணவருடன் கோபித்துக் கொண்டு, பாரதிபுரத்தில் உள்ள தனது தாய் இன்னாசியம்மாள் (43) வீட்டுக்குச் சென்றார்.

இதையடுத்து, செல்வராஜ் 5.3.23 அன்று தனது மாமியார் வீட்டிலிருந்த தனது மனைவி டயானா மேரியை தன்னுடன் வரும்படி கூறி மதுபோதையில் தகராறு செய்துள்ளார். டயானா மேரி, அவரது தாய் இன்னாசியம்மாள் இருவரும் செல்வராஜை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, செல்வராஜ் வீட்டுக்கு வெளியே படுத்திருந்தார்.

நள்ளிரவு 2 மணியளவில் வீட்டுக்கு வெளியே செல்வராஜ் படுத்திருந்ததால், ஆத்திரமடைந்த இருவரும், ‘நீ இன்னும் வீட்டுக்கு போகலையா’ என்றுக்கூறி, அண்டாவில் தண்ணீரை காய்ச்சி, செல்வராஜ் மீது சுடு தண்ணீரை ஊற்றினர். இதனால் அலறித்துடித்த செல்வராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வராஜ் உயிரிழந்தார்.

இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, டயானா மேரி, இன்னாசியம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வாத, பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிபதி சுவாமிநாதன் நேற்று தீர்ப்பளித்தார்.

டயானா மேரி, இன்னாசியம்மாள் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து, அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அரசு சிறப்பு வழக்கறிஞர் சக்திவேல் ஆஜரானார். திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் சந்திரமோகன், உதவி ஆய்வாளர் பூபதி ஆகிய இருவரும் புலன் விசாரணை மேற்கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE